Sunday, February 8, 2015

ஆயிரத்தில் ஒருவன்
சோழர்களை மையமாக வைத்து இயக்குனர் செல்வராகவன் அவர்களால் எடுக்கப்பட்ட "ஆயிரத்தில் ஒருவன்" படம் பார்த்த போது இப்படி கற்பனையாக ஒரு கதையை எடுப்பதற்கு பதிலாய் உண்மையாக அவர்களின் ஆட்சியின் போது நடந்த இந்த விஷயத்தை படமாக்கி இருந்திருந்திருந்தால் எவ்வளவு சுவாரசியமாக அந்த கதை நகர்ந்திருக்கும் என்ற கவலை இருந்தது.
வருடம் 910, பாண்டிய நாட்டை கைப்பற்ற பராந்தக சோழனின் பெரும்படை மதுரையை முற்றுகை இடுகின்றது, படை எடுப்பினால் பாண்டிய மன்னன் "மாறவர்மன் இரண்டாம் ராஜசிம்மன்" மதுரையை இழக்கிறான். இலங்கையை ஆண்டுகொண்டிருந்த ஐந்தாம் கசப்பனிடம் உதவி நாடினான். பாண்டியனுக்கு உதவ சக்கசேனாபதி தலைமையில் ஒரு படையை தன நாட்டில் இருந்து அனுப்பினான் இலங்கை மன்னன். வெள்ளூர் என்ற இடத்தில் பாண்டிய இலங்கை கூட்டுப் படை சோழர்களை எதிர்த்து களம் இறங்குகின்றது,
போரில் சோழர்கள் வெற்றி பெறுகிறார்கள். தன்னுடைய படையை திரும்பப் பெற்றுக்கொள்கிறான் இலங்கை அரசன். இந்த போரினால் பாண்டிய நாடு சோழர்கள் வசமாகின்றது. பாண்டிய நாட்டை வென்றதன் அடையாளமாய் பாண்டிய மன்னனின் மணி மகுட்டத்தை சூட்டிக் கொள்ள மதுரைக்கு வந்த பராந்தகனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, பாண்டியன் தன்னுடைய மணிமுடியையும், இந்திர ஆரத்தையும் எடுத்துக் கொண்டு இலங்கை ஓடி, இலங்கை மன்னனிடம் அவற்றை பத்திரமாக வைத்திருக்கும் படி சொல்லிவிட்டு சேர நாடு வந்துவிடுகிறான். மணி முடி இலங்கையில் இருப்பது தெரிந்து அவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி பராந்தகன் கேட்டும் இலங்கை மன்னன் திருப்பித் தராததால், அவற்றைக் கைப்பற்ற இலங்கைக்கு சோழர் படையை அனுப்பி வைக்கிறான், இலங்கை மன்னன் நான்காம் உதயன் அவற்றை எடுத்துக் கொண்டு இலங்கையின் தென்பகுத்திக்கு ஓடிவிடுவதால் போரில் சோழர்களின் படை வெற்றி பெறமுடிந்தாலும் அந்த மணிமுடியையும் ஆரத்தையும் கைப்பற்றமுடியவில்லை!.
பராந்தகனுக்கு பின்னர், கண்டராத்திதன், சுந்தர சோழன், உத்தம சோழன் என பலரும் ஆட்சி செய்கிறார்கள், அந்த மணி முடியை கைப்பற்றவில்லை, ஏன் இவர்களுக்கு பின்னர் வந்த ராஜ ராஜ சோழன் கூட இலங்கை மீது படை எடுத்தான், அப்போது கூட பாண்டியனின் அந்த மணிமுடியை பிடிக்க முடியவில்லை, 1017 ஆம் ஆண்டு ஒரு வேங்கை சோழ தேசத்தில் இருந்து புறப்படுகின்றது, அந்த வேங்கைக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது, வெற்றியை மட்டுமே ருசித்த அந்த வேங்கை இலங்கையில் கால் வைக்கின்றது. தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என முதல் முறையாக இலங்கை மொத்தமும் சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றது அந்த வேங்கை, அதோடு மட்டும் நிற்கவில்லை, வெறி கொண்ட அந்த வேங்கை தன் முப்பாட்டன் காலத்தில் பாண்டிய மன்னன் இலங்கையில் கொண்டு பத்திரப்படுத்திய அந்த மணிமுடியையும், இந்திர ஆரத்தையும் கண்டுபிடிக்கின்றது, இது மட்டும் போதாது, பல தலைமுறைகளாக இதை சோழர்களுக்கு கொடுக்காமல் வைத்திருந்த அந்த இலங்கை மன்னனின் மணிமுடியையும், அந்த அரசனின் மனைவி மணிமுடியும் சேர்த்து பறித்துக் கொண்டு சோழ தேசம் நோக்கி வந்தது அந்த வேங்கை, பராந்தகன் காலத்தில் பாண்டியனின் மணிமுடியை இலங்கை மன்னன் பெற்றுக்கொண்ட போது அந்த வேங்கை பிறந்திருக்க கூட வாய்ப்பில்லை!. ஆம்.. அந்த வேங்கையின் பெயர் "ராஜேந்திர சோழன்"!. அவன் "ஆயிரத்தில் ஒருவன்" இதோ கீழே அந்த கல்வெட்டு...
"பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கு எழில் முடியும்
முன்னவர் பக்கம் தென்னவர் வைத்த
சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்
தென்திரை ஈழ மண்டலம் முழுவதும்...."

1 comment: